கிரியா யோகம் ஒன்றிற்கும் மேற்பட்ட தீட்சைக் கருத்தரங்குத் தொடராகக் கற்பிக்கப்படுகின்றது. நம்முள் ஒருங்கிணைந்த மேம்பாட்டினை உண்டு செய்ய, தொடர்ச்சியான சில யுக்திகளை உட்கொண்டுள்ளது கிரியா யோகம். பல்வேறு விதமான யுக்திகளைத் தீவிரமாகப் பயிற்சி செய்தலின் மூலம் ஒருவருக்கு முழுமையான மாற்றம் கிடைக்கின்றது. மேம்பட்ட உடல் அரோக்கியம், சக்தி நிலை, சமன் பட்ட உணர்ச்சிகள், முழுமையான மன அமைதி, அதிகரித்திருக்கும் கவனம் மற்றும் உத்வேகம், அறிவு, மற்றும் ஆன்மீக ஞானம் ஆகியவை கிரியா யோகத்தின் பயிற்சியினால் வரும் சில பயன்கள் ஆகும். கிரியாக்கள் எனப்படும் யோக யுக்திகளை தினமும் பயிற்சி செய்வதன் மூலம், அளவிலா சக்தி, ஸ்திரத்தன்மை, மற்றும் அமைதி கிடைப்பதோடு மட்டுமல்லாது, அளவற்ற ஆற்றலும் தொலை நோக்குப் பார்வையும் ஒருவர் அடையலாம். நமது உடலிலும், மனதிலும் உள்ள செயலாற்றும்-தன்மை மற்றும் செயலற்றிருக்கும் தன்மை ஆகிய குணங்களை சமன் செய்து, கிரியா யோகம் நமக்கு சமநிலையும் முழு அமைதியையும் தருகின்றது. உடல், மனம் மற்றும் ஆன்ம நிலையில் மாற்றம் பெற விரும்புவோருக்கு இப்பயிற்சி மிகவும் உகந்ததாகும். இயேசு பிரான் கூறியதைப் போல், பூமியிலேயே இறைவனின் ஆட்சியைக் காண விரும்புவோருக்கு இது மிகவும் அவசியம். தங்களது வாழ்விலும், அடுத்தவரிடத்தும் மிகுந்த ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியினைக் காண விழைவோருக்கு இப்பயிற்சி ஏற்றதாகும். ஒருவரது வயது, பாலினம், பண்பாடு, சமூக மற்றும் சமயச் சார்பு அல்லது முந்தைய அனுபவம் ஆகியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, அனைவருக்கும் பயனளிக்க வல்லது கிரியா யோகம்.
கிரியா யோகம் வாழ்க்கையை, இன்பம் மற்றும் துன்பம் கலந்த ஒருங்கிணைக்கப்பட்டு சரியான நேரத்தில் சரியான இடத்தில் நிகழும் பல நிகழ்வுகளின் தொகுப்பாகக் காண்கின்றது. கிரியா ஆசனங்கள், கிரியா பிராணாயாமம், கிரியா யோக தியானம் மற்றும் கிரியா மந்திரங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஒருவரது விழிப்புணர்வுநிலை மற்றும் சக்தி நிலையை உயர்த்துகின்றது. இதன் மூலம் ஒருவர், இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் சமமாகப் பார்த்து, தனது வளர்ச்சிக்கான வாய்ப்பாக அவற்றை ஏற்றுக்கொளகின்றார்.
கிரியா யோகம், உடல், உயிர், மனம், அறிவு மற்றும் ஆன்மநிலை சாதனையாகும். இதன் மூலம் நாம் நமது உண்மையான சொரூபத்தினையுணர்ந்து, கலங்கமற்ற சாட்சித்தன்மையில் ஐக்கியமாகி, உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களில் இருந்து நம்மை வேறுபடுத்திக்கொண்டு அகங்காரத்தினை விட்டொழிக்கலாம். இதன் மூலம் நாம் நமது வாழ்வினை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறோம். அவ்வாறு சுய கட்டுபாடு மேம்படும் பொழுது, ‘நான் செய்கின்றேன்’ என்னும் எண்ணத்தை விடுத்து, வாழ்க்கை நமக்களிக்கும் வாய்ப்புகளை முழுமனத்தோடு ஏற்றுக்கொள்கின்றோம். நமது வாழ்வில் இறைவனின் அனுகூலம் பெற நம்பிக்கையும், நன்றியுணர்வும் பக்தியும் கிரியா யோகப் பயிற்சியினால் மேம்படுகின்றது. நாம் இறைவனை நினைந்து தியானித்து, இறைவனின் நண்பனைப்போல அவருடன் பேசி அவரது பதிலையும் கேட்க முடிகின்றது.
கிரியா யோகப் பயிற்சியினால் மனத்தெளிவும் முனைப்பும் பெருகுவதால், தொடர்ந்து நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும் சரியான வகையில் செயலாற்ற முடிகின்றது. பெருகும் மனத்தெளிவு மற்றும் அறிவுத்திறனால் நமது விழிப்புணர்வு நிலை விரிவடைந்து, குறைந்த சக்தி செலவிட்டு மிகுந்த பயன்களை சாதிப்பதோடு, அவற்றிற்கான நற்பெயரையும் விரும்பாது, இறைவனிடத்தே நன்றியுணர்வு பெருகுகின்றது.
கிரியா யோகப் பயிற்சிகள், நமது உள்ளுணர்வு மற்றும் குணப்படுத்தும் ஆற்றலை வலுவடையச் செய்கின்றது. நமது நோய் எதிர்ப்புத் திறன் வலுப்பெற்று, மிகுந்த ஆரோக்கியமும், வலுவான நரம்பு மண்டலம், அதிக சக்தி மற்றும் அமைதியான குணமும் பெறலாம்.
கிரியா யோகப் பயிற்சியினால் நமது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவை முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவதால், நமக்குள் இருக்கும் ‘குண்டலினி’எனப்படும் பேராற்றல் வாய்ந்த விழிப்புணர்வு நிலை எழுப்பப்படுகின்றது. நமது விழிப்புணர்வு நிலையே நமது குணம் மற்றும் வாழ்வியல் தரத்தைத் தீர்மானிக்கின்றது. ஆகையால் நாம் மேம்பட்ட விழிப்புணர்வு நிலையை அடைதல் வேண்டும். இதன் மூலம், நம் மனது வேறு பல பரிணாமங்களையுணர்ந்து நமது நற்செயல்களின் மூலம் இவ்வுலகிற்கும் நம்மைச் சுற்றியுள்ளோருக்கும் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
செய்தி
எமது அறக்கட்டளையானது ருத்ரப்ரயாக் அருகில் நிர்மானித்துக்கொண்டிருக்கும் பாடசாலை..
மனிதனுக்கும் இறைவனின் விந்தைகளுக்கும் இடையேயான முதல் சந்திப்பு மௌனத்தின் மூலமே ஏற்படுகிறது. மௌனத்தின் அமுதத்தை ருசியுங்கள்.