பாபாஜி என்பவர் யார்?


1946ஆம் ஆண்டு, இந்தியாவின் தலை சிறந்த யோகிகளில் ஒருவரான பரமஹம்ஸ யோகானந்தர், தனது “ஒரு யோகியின் சுயசரிதம்” என்னும் நூலில், கிரிஸ்த்துவைப் போல் திகழ்ந்த இறவா யோகியான மஹாவதார் பாபாஜி குறித்து வெளிப்படுத்தினார். பல ஆன்மீக குருக்களை அவர்களுக்கே தெரியாமல் பாபாஜி எப்படி தொலைவில் இமய மலையிலிருந்து கொண்டே வழி நடத்தினார் என யோகானந்தர் விளக்கினார். பாபாஜி தனது மனித எல்லையைக் கடந்த ஓர் மாபெறும் சித்தராவார். இவர் மனிதகுலத்தின் ஆன்மீக வளர்ச்சிக்காகப் பின்னணியில் அமைதியாக தனது பணியினை செய்து வருகிறார். மேலும், லாஹிரி மஹாஸாயருக்கு 1861ஆம் ஆண்டு மிகவும் சக்தி வாய்ந்த யோக யுக்திகளான கிரியா யோகாவை கற்பித்தவரும் பாபாஜியே ஆவார் என யோகானந்தர் குறிப்பிடுகிறார். லாஹிரி மஹாஸாயர் மேலும் பலருக்கு கிரியா யோக தீட்சை வழங்கினார். அவர்களுள் யோகானந்தரின் குருவான ஸ்ரீ யுக்தேஷ்வரும் ஒருவர். யோகானந்தர் தனது குருவுடன் 10 ஆண்டுகள் கழித்த பிறகு அவர் முன் பாபாஜி தோன்றி அவரை மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று புனிதமான கிரியா யோக விஞ்ஞானத்தை போதிக்கப் பணித்தார். யோகானந்தர் புனிதமான இப்பணியை 1920 முதல் 1952ஆம் ஆண்டு வரை திறம்பட செய்து தனது பருவுடலை நீத்து மஹா சமாதி அடைந்தார். கிரியா யோக பயிற்சியினாலும் மற்றும் ஏனைய கிரியா யோக குருக்களின் அருளாலும் யோகானந்தரின் உடல், அவர் இறந்து 21 நாட்களுக்குப் பின் நிலவறையில் இடும் வரையிலும் சீர்கெடாதிருந்தது. 2002ஆம் ஆண்டு, மார்ச் 7ஆம் நாள் யோகானந்தர் மஹா சமாதி அடைந்த 50ஆம் ஆண்டு நினைவு நாள். அப்பொழுது அவரது உடல் சமாதி கோயிலுக்கு மாற்றப்பட்டது. உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் யோகானந்தர் விட்டுச் சென்ற மரபை நன்றியோடு நினைவுகூர்ந்தனர்.


கிரியா பாபாஜி தன்னை வெளிப்படுத்துகிறார்


1942ஆம் ஆண்டு முதல், கிரியா யோகத்தைப் பரப்புவதற்காக தென்னிந்தியாவில் S.A.A.இராமையா மற்றும் V.T.நீலகண்டன் எனும் இரண்டு ஆன்மாக்களை பாபாஜி தயார் படுத்திக்கொண்டிருந்தார். S.A.A.இராமையா, சென்னைப் பல்கலைக்கலகத்தில் புவியியல் பயின்று வந்த இளம் மாணவராவார். பிரசித்தி பெற்ற பத்திரிக்கையாளரான V.T.நீலகண்டன், அன்னீ பெசண்ட் அம்மையாரின் நெருங்கிய மாணவர் மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் ஆலோசகரும் ஆவார். இவ்விருவருக்கும் தனித்தனியே தோன்றிய பாபாஜி, தனது இறைப்பணிக்காக இவர்களை ஒன்று சேர்த்தார். 1952 மற்றும் 1953ஆம் ஆண்டுகளில் ‘பாபாஜியிம் குரல் மற்றும் உள்ளுணர்வு திறக்கப்பட்டது’, ‘சர்வ ரோகங்களுக்கும் பாபாஜியின் தீர்வு’ மற்றும் ‘மரணத்தின் மரணம் – பாபாஜி’ ஆகிய நூல்களை, V.T.நீலகண்டனிற்கு பாபாஜி கட்டுறுத்திக் கூறினார். பாபாஜி, தனது தோற்றம், மரபு மற்றும் கிரியா யோகத்த்தைப் பற்றியும் அவருக்கு வெளிப்படுத்தினார். பாபாஜியின் விருப்பதிற்கிணங்க, 1952ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள், V.T.நீலகண்டன் மற்றும் S.A.A.இராமையா ஆகிய இருவரும் சேர்ந்து பாபாஜியின் கிரியா யோகத்தைப் பரப்புவதற்காக ‘கிரியா பாபாஜி சங்கம்’ எனும் அமைப்பைத் தோற்றுவித்தனர். இவ்வாறு வெளியிடப்பட்ட்டு விநியோகிக்கப்பட்ட இந்த நூல்கள் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. SRF நிறுவனம், இந்த நூல்களையும், கிரியா பாபாஜி சங்கத்தையும் நசுக்க முயன்றது. இந்த முயற்சி, V.T.நீலகண்டனின் நண்பரும் அப்பொழுது இந்தியப் பிரதமராகவும் இருந்த பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு, பாபாஜியின் கிரியா யோக அறக்கட்டளை, இந்த மூன்று நூல்களையும் மறுப்பதிப்பித்து, ‘பாபாஜியின் குரல்` எனும் ஒரே நூலாக வெளியிட்டது.

‘சர்வ ரோகங்களுக்கும் பாபாஜியின் தீர்வு’ எனும் நூலில் பாபாஜி ‘நான் யார்’ எனுபதற்கான விடையை வெளிப்படுத்துகிறார். உண்மையில், நாம் யாரென்று நாம் உணரும்பொழுது பாபாஜி யார் என்பதையும் நாம் அறிந்து கொள்கிறோம். பாபாஜி தன்னைத் தனிமனிதப் பண்பியல்புகளைக் கொண்டோ, தனது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பினைக் கொண்டோ அல்லது தெய்வ கடாட்சத்துடன் உருமாற்றம் பெற்ற தனது ‘சுத்த’ தேகத்தினைக் கொண்டோ குறித்துக் காட்டவில்லை. இருப்பினும், தனது நூலில் தன் வாழ்வில் நடந்த சில குறிப்பிட்ட விவரங்களை, நமக்கு ஆன்ம-ஞானம் அடைவதற்கான ஒரு பாதையைக் காட்ட, வெளிப்படுத்தினார். இவ்விவரங்கள் ‘பாபாஜி மற்றும் பதினெண் சித்தர் கிரியா யோக மரபு’ எனும் நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பாபாஜிக்கு ‘நாகராஜ்’ என்று பெயர் சூட்டப்பட்டது. நாகராஜ் என்பதற்கு ‘பாம்புகளின் அரசன்’ என்று பொருள். இது, நம்முள்ளிருக்கும் அளவிலா இறையாற்றலைக் குறிக்கின்றது. 203ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் தமிழகத்திலுள்ள ஒரு கடலோர கிராமமான பரங்கிப்பேட்டையில் கிருஷ்ணர் பிறந்த ரோஹினி நட்சத்திரத்திலேயே பாபாஜியும் பிறந்தார். தீபங்களின் திருவிழாவான கார்த்திகை தீபத் திருநாளில் இப்பிறப்பு நிகழ்ந்தது. நம்பூதரி பிராமணர்களான இவரது பெற்றோர்கள், தென்மேற்கு மலபார் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்தனர். இவரது தந்தை, அங்கிருந்த சிவன் கோவிலில் அர்ச்சகராக இருந்தார். இப்பொழுது அக்கோவில் முருகனுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

நாகராஜ், தனது ஐந்தாவது வயதில் ஒரு வணிகனால் கடத்தப்பட்டு இன்றைய கோல்கத்தாவிற்கு ஒரு அடிமையாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, ஒரு பணக்கார வர்த்தகர் அவனை விலைக்கு வாங்கி பிறகு முழு சுதந்திரத்துடன் விடுவித்தார். பிறகு, சுற்றித் திரிகிற துறவிகளின் குழுவில் சேர்ந்து புனிதமான சமய மற்றும் தத்துவ இலக்கிங்களில் தேர்ச்சி பெற்றார். இதில் நிறைவு பெறாத நாகராஜ், தெற்கே வாழ்ந்து வந்த பூரணத்துவம் பெற்ற மஹா சித்தர் அகஸ்த்தியரைப் பற்றி அறிந்து கொண்டு, அவரைக் காண தெற்கு சிலோனிலுள்ள புனிதமான கத்திர்காமக் கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டார். அங்கு, அகஸ்த்தியரின் பிரதான சீடரான போகநாத்தரை சந்தித்து கடுமையான தியானம் மற்றும் சித்தாந்தத்தை போகநாத்தரிடம் பயின்றார். இப்பயிற்சியின் மூலம், சர்விகல்ப சமாதி அனுபவம் பெற்று, கதிர்காமத்தின் மூலவரான முருக பெருமானின் தரிசனமும் பெற்றார்.

நாகராஜிற்கு 15 வயது ஆனவுடன், போகநாதர், குற்றாலத்திற்கருகில் வாழ்ந்த தனது குருவான அகஸ்த்தியரிடம் அனுப்பி வைத்தார். நாற்பத்தி எட்டு நாட்களுக்குக் கடுமையான யோகப் பயிற்சி மேற்கொண்ட பிறகு, நாகராஜிற்கு அகஸ்த்தியர் காட்சியளித்து, சக்தி வாய்ந்த கிரியா குண்டலினி பிராணாயாமப் பயிற்சியில் தீட்சையளித்தார். சிறுவன் நாகராஜை இமயத்தில் உயரே அமைந்துள்ள பத்ரிநாத்திற்குச் சென்று பயின்றதனைத்தையும் தீவிரமாகப் பயிற்சி செய்து ‘சித்த’னாகப் பணித்தார். அடுத்த 18 மாதங்கள், நாகராஜ் ஒரு குகையில் தனியே வாழ்ந்து, போகநாதர் மற்றும் அகஸ்த்தியர் கற்பித்த யோகப் பயிற்சிகளை பயிற்சி செய்தார். அவ்வாறு இறைவனிடம் தனது அங்காரத்தைச் சமர்பித்துச் சரணடைக்கையில், தனது உடலிலுள்ள செல்கள் உட்பட முழுமையாக இறைத்தன்மைப் பெற்றார். இறையுணர்வு மற்றும் இறை சக்திக்கு, சரணடைந்த முழு சித்தரானார். அவரது உடல், மரணம் மற்றும் நோய்களிலிருந்து முழு சுதந்திரம் பெற்றது. மஹா சித்தராக மாற்றம் பெற்ற பாபாஜி, துன்பத்தில் உழலும் மனித குலத்தின் மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.


சிரஞ்சீவி பாபாஜி


அன்றிலிருந்து பல நூற்றாண்டுகளாக பாபாஜி, சரித்திரத்தில் இடம்பெற்ற பல மாமுனிவர்கள் மற்றும் ஆன்மீக குருக்களின் இறைப்பணியில் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஒன்பதாம் நூற்றாண்டில் இந்து மதத்தைச் சீர்ப்படுத்திய ஆதி சங்கரர், பதினைந்தாம் நூற்றாண்டில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் அன்பைப் பெற்ற கபீர் ஆகியோரும் இதில் அடங்குவர். இவர்களிருவரும் பாபாஜியிடம் நேரடியாக தீட்சைப் பெற்று அவர்களின் இலக்கியப் படைப்புகளில் பாபாஜியைக் குறிப்பிட்டுள்ளனர். பாபாஜி, ஒரு 16 வயது வாலிபனைப் போன்றதொரு குறிப்பிடத்தக்க தோற்றத்தைப் பேணுகிறார். 19ஆம் நூற்றாண்டில், மேடம் பிளவட்ஸ்கி அவர்கள், பாபாஜியை மைத்த்ரேயர் எனவும் வாழும் புத்தர் (அ) நவீன யுகத்திற்கான குரு எனவும் குறிப்பிடுவதான C.W.லெட்பெட்டரின் “மாஸ்டர்ஸ் அண்ட் தி பாத்” எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக பிறர் கண்களுக்குப் புலப்படாதிருக்க விரும்பும் பாபாஜி, சில நேரங்களில் தனது பக்தர்களுக்குக் காட்சியளித்து, அவர்களது இதயத்தில் நீங்கா இடம் பெற்றுவிடுகிறார். இதன் மூலம் அவர்களுடன் ஒரு பக்தி சார்ந்த உறவை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி காட்டுகின்றார். நம் ஒவ்வொருவருடனும் அவர் கொண்டுள்ள உறவு, நமது தேவைக்கேற்ப சற்று மாறுபட்டே அமைகின்றது. அவர் நமது தனிப்பட்ட குரு ஆவார். நமது இதயம் விஸ்த்தரிக்கும் பொழுது, உலகளாவிய அன்பையுணர்வதன் மூலம் நாம் பாபாஜியுடன் ஒன்றுபட்டு, அனைத்திலும் பாபாஜியைக் காணுகின்றோம்.


பாபாஜியின் மூலம் கிரியா யோகத்தின் மறுமலர்ச்சி


தனது யோக சூத்திரத்தில் சித்தர் பதஞ்சலி குறிப்பிட்டுள்ள கிரியா யோகத்திற்கு பாபாஜி மீண்டும் உயிரூட்டினார். பதஞ்சலி, யோக சூத்திரத்தினை 3ஆம் நூற்றாண்டு எழுதினார். அதில், இரண்டாம் அத்தியாயம், முதல் சூத்திரத்தில் கிரியா யோகத்தைப் பின் வருமாறு விளக்குகிறார். கிரியா யோகம் என்பது, தடையிலாப் பற்றின்மைப் பயிற்சி, சுய ஆய்வு மற்றும் இறை பக்தி ஆகியவற்றை உட்கொண்டதாகும். ஆனால் பாபாஜியோ, இவற்றுடன் பிராணாயாமம், மந்திரங்கள் மற்றும் இறை வழிபாடு ஆகியவற்றையும் இணைத்து, சக்தி வாய்ந்த குண்டலினி எனும் விழிப்புணர்வினை எழுப்பும் தாந்திரீகப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டார். இவ்வாராக, அவரது நவீனத் தொகுப்பான கிரியா யோகம் பல்வேறு வகையான பயிற்சிகள் அடங்கியது. 1861ஆம் ஆண்டு, லாஹிரி மஹாசாயருக்கு ஆற்றல்மிக்க கிரியா யோக தீட்சை வழங்கினார்.


கிரியா யோகத்தின் வேறு பல யுக்திகளை பாபாஜி வெளிப்படுத்துகிறார்


1954ஆம் ஆண்டு, இமயமலையில் பத்ரிநாத்திற்கு அருகேயுள்ள கார்வால் பகுதியில் அமைந்துள்ள தனது ஆசிரமத்தில், மிகச்சிறந்த பக்தனான S.A.A. ராமையாவிற்கு பாபாஜி கிரியா யோகத்தின் முழு ஒருங்கியமான 144 யுக்திகளில் தீட்சையளித்தார். ஆசனங்கள், மூச்சுப் பயிற்சியாம் பிராணாயாமம், தியானம், மந்திரங்கள் மற்றும் பக்தி சார்ந்த யுக்திகள் அவற்றுள்ளடக்கம். S.A.A. ராமையா, பிற்காலத்தில் ஒரு தலை சிறந்த யோகியானார். “பாபாஜியின் கிரியா யோகம்’ என்றழைக்கப்படும் இந்த யோக முறையை உலகெங்கும் பல்லாயிரக்கனக்கானோருக்கும் பயில்விக்கும் பணியை மேற்கொள்ளலாயினார்.

அதிர்ஷ்டவசமாக, பாபாஜி தனது இறைப்பணிக்காக அவ்வபோது திரை மறைவிலிருந்து வெளியே வருகிறார். 1970களில் இமயமலையிலுள்ள குமாஉன் மலைப்பகுதியில் ஸ்வாமி சத்யேஸ்வரானந்தா என்பவருக்கு பாபாஜி காட்சியளித்து, லாஹிரி மஹாசாயரின் படைப்புகளை மொழி பெயர்த்து வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இவற்றை, “சமஸ்கிருத இலக்கியங்கள்” என்னும் தொடராக கலிஃபோர்னியா மாகாணம், சான் டியாகோவிலுள்ள தனது இல்லத்திலிருந்து ஸ்வாமி சத்யேஸ்வரானந்தா வெளியிட்டார். இப்பக்கத்தை எழுதியவரான எம். கோவிந்தன் அவர்களுக்கு பாபாஜி 1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு முறை பிராண தேகத்தில் தரிசணமளித்தார். இந்நிகழ்ச்சி, பத்ரிநாத்திற்கு வடக்கே 30 கி.மீ. தொலைவில், கடல்மட்ட்த்திலிருந்து 5000 மீட்டர் உயரே, ஆலக்னந்தா ஆற்றின் பிறப்பிடத்தில் நிகழ்ந்த்து. அப்பொழுது பாபாஜி, பிரகாசமான வாலிபராய், செப்பு நிற கேசத்தோடு வெள்ளை நிற வேஷ்டி அணிந்திருந்தார்; மேலும் தனது திருவடிகளைத் தொட்டு ஆசி பெறவும் அனுமதித்தார்.


பாபாஜி அடைந்துள்ள பேறு


பாபாஜியின் சித்தர் பண்பாட்டினைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் யாராலும், பாபாஜி யார் என்றோ அல்லது அவரது மஹாத்மியத்தைப் புரிந்து கொள்ளவோ இயலாது. தம்முள் இருக்கும் இறையாண்மையை உணர்ந்த பிறகு, சித்தர்கள், எங்கோ வேற்றுலகில் சொர்க்கம் சென்றடைய முற்படாது, அந்த இறையுணர்விற்குத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, இறைநிலையை அனைத்துப் பரிணாமங்களிலும் வெளிப்படுத்தினர். அவர்கள் தங்களது மனித இயல்பை முழுவதுமாக மாற்றியமைத்துக் கொண்டனர்.

இரண்டாம் நூற்றாண்டு முதல் நாங்காம் நூற்றாண்டுக்குள் சித்தர் திருமூலரால் எழுதப்பட்ட “திருமந்திரம்”, 3000 முத்துப் போன்ற பாக்களின் மூலம் சித்தர்களின் மஹாத்மியத்தைப் பற்றி விளக்குகின்றது. நமது ஆராய்ச்சியின் மூலம், திருமூலர், பாபாஜியின் குருவான போகநாதர் மற்றும் யோக சூத்திரங்களை எழுதிய பதஞ்சலி முனிவர் ஆகியோரின் சமகால சகோதரச் சீடராவார். பொதுவாக, சித்த இலக்கியங்கள் பலவும், தாம் படைக்கப்பெற்ற தமிழ் அல்லது சமஸ்கிருத மொழியிலிருந்து வேறு மொழிகளுக்கு மொழிபெயற்கப் படவில்லை. இருப்பினும், முனைவர். காமில் ஜ்வெலிபில்லின் “பொயெட்ஸ் ஒஃப் தி பவர்ஸ்” (ஆற்றலின் புலவர்கள்) மற்றும் பேராசிரியர் டேவிட் கோர்டனின் “தி அல்கெமிகல் பாடி” (ரசவாத உடல்) ஆகிய படைப்புகள் சித்தர்களைப் பற்றிச் சிறந்த முன்னோட்டதினையளிக்கின்றன. இவ்விரு படைப்புகளுமே சித்தர்கள் அடைந்துள்ள மேன்மையான நிலையைப் பற்றி மிக விளக்கமாக எடுத்துரைத்து, பாபாஜி ஏதோ வித்தியாசமான வேற்று கிரகத்தவரல்ல என்று தெளிவு படுத்துகின்றன. ஸ்ரீ அரவிந்தர், அனைவரும் அடைய வேண்டும் என்று விரும்பிய மனித இயல்பின் ‘முழு மேன்மன மாற்றம்’ என்னும் மனித குலத்தின் அடுத்த பரிணாமத்தின் முழு வெளிபாடாகத் திகழ்கிறார் பாபாஜி. அவர் ஒரு இரட்சகரும் அல்ல; எந்த ஒரு சமயத்தையும் நிறுவியவரும் அல்ல. நமது அங்கீகாரத்திற்கோ அல்லது போற்றுதலையோ விரும்புபவரும் அல்ல. எல்லா சித்தர்களையும் போல, தன்னை முழுமையாக இறையுணைவிற்குச் சமர்ப்பித்து, இறைவனின் கருவியாக இவ்வுலகிற்கு தெளிந்த ஒளியும், எல்லையற்ற ஆன்ந்தத்தையும் அளவிலா அமைதியையும் கொண்டுவருகிறார். இவ்வுலகத்தவர் அனைவரும் மனிதத்தின் முழுமையான ஆற்றலை அடைவோமாக.


Mountains
Badrinarayan Temple

செய்தி




Order builds school near Rudraprayag

எமது அறக்கட்டளையானது ருத்ரப்ரயாக் அருகில் நிர்மானித்துக்கொண்டிருக்கும் பாடசாலை..

விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யலாம்.


Silence -Mouni Baba

மனிதனுக்கும் இறைவனின் விந்தைகளுக்கும் இடையேயான முதல் சந்திப்பு மௌனத்தின் மூலமே ஏற்படுகிறது. மௌனத்தின் அமுதத்தை ருசியுங்கள்.

download

 

© 1995 - 2024 · Babaji's Kriya Yoga and Publications · All Rights Reserved.  "Babaji's Kriya Yoga" is a registered service mark.   ॐ Mahavatar Babaji ॐ